Wednesday, September 28, 2022

போஸ்டர் என்பது திரைப்படத்தின் முகம் போன்றது. திரைப்படத்தின் கருவினை ஒரு படத்தின் மூலம் நயம்பட்டச்சொல்லும் இந்தக்கலையானது மிகவும் ரசனைக்குரியதாகும். நிறைய போஸ்டர்களை சேகரித்து வைத்திருக்கின்றேன். "மிட் நைட் இன் பாரீஸ்" திரைப்படத்தில் ஓவன் வில்சன் அவர்கள் பாரீஸ் நகரில் சேய்ன் நதிக்கரையோரம் நடந்துவரும் காட்சியானது பிரபலமான போஸ்டர் ஆகும். நம்ம ஷாருக்கான் அவர்கள் "கல் கோ நா கோ" திரைப்படத்தில் நியூ யார்க் நகரில் ப்ரூக்ளின் பாலத்தில் நடந்துவரும் காட்சி, இது போன்ற பல திரைப்படக் காட்சி போஸ்டர்களை நம் நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருக்கும். சமீபத்தில் "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படத்தில் துஷாரா விஜயன் அவர்கள் பாண்டிச்சேரியில் நகரில் ஒரு ரோட்டு பாலத்தில் நடந்து வரும் காட்சி மிக அற்புதமாகவும் அழகாகவும் படமாக்கப்பட்டு இருந்தது. நல்ல ஒளியமைப்பு, நல்ல பிரேம், கண்கவர் வண்ணங்கள் , நவநாகரீக உடையணிந்த புதுமைப்பெண் என்ற அளவில் மட்டுமல்லாமல் அதில் உள்ள அரசியல் காரணமாக மிகவும் பிடித்துப்போனது. (இந்தக்காட்சியினை ஏன் போஸ்டராக்காமல் விட்டார்களோ தெரியவில்லை.) ப.ரஞ்சித் அவர்கள் நான் நினைக்கும் அரசியலை அப்படியே திரையில் வடித்துத்தருகின்றார். காந்தி சட்டையை கழற்றியதற்கும் அம்பேத்கர் கோட்டை போட்டதற்க்கும் பினால் பெரிய அரசியலே உள்ளது என்று கபாலியில் சொல்லியிருப்பார். அதன் நீட்சிதான் "நட்சத்திரம் நகர்கிறது". ப.ரஞ்சித்தின் அரசியலை செவ்வனே நடத்திக்கொடுத்திருக்கின்றார் துஷாரா விஜயன். அடங்காமல் அட்டகாசம் பண்ணும் ஒழுக்கக்கேடான பெண்ணாகத்தான் இருக்கின்றார் துஷாரா விஜயன், அதில் என்ன அரசியல் கண்டாய் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் உள்ள நுண் அரசியலானது உங்கள் உள்மனதால் உள்வாங்கப்பட்டு ஒரு மூலையில் வைக்கப்பட்டு பெருகி பெருகி பின்னாளில் உங்களை நேரடியாகவே அந்த அரசியலை உணர வைத்துவிடும். என்ன அட்டக்கத்தி மாதிரி ஜனரஞ்சகமாக எடுத்திருந்தால் மிக நன்றாக பேசப்பட்டு இருந்திருக்கும் .

No comments: