Saturday, October 08, 2022

சென்றவாரம் நீயா நானா நிகழ்ச்சியானது இன்றைய இளைய தலைமுறை மற்றும் முந்தைய 3 தலைமுறையையோ சேர்ந்த பெண் பாடல் ரசிகர்களின் எதிர் எதிர் உரையாடல் ஆகும்.

   பெண்களின் கலாரசனையானது மிக ஆழமானது அதைஎப்படி அனுபவிக்கின்றார்கள் என்றறிவதற்காக பெண்களைமட்டும் என்று கோபி சொன்னார். 

தமிழ்நாட்டுப்பெண்கள் வழக்கம் போல காதலன், கணவன் , வரப்போகும் காதலன், வரப்போகும் கணவன் பற்றிய பாடல்களைத்தான் சொல்லி சிலாகிக்கபோகின்றார்கள் என்று நினைத்தேன். 

பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது, ஆனால் ஆச்சரியப்படும்படியாக சிலர், வாழ்வியல், மனவியல் குறித்த பாடல்களைப்பற்றி ஆர்வமாக பேசினார்கள்.

 பெரும்பாலும் பாடல்வரிகளுக்காகவே பாடல்களை ரசிப்பதாக சொன்னார்கள். அது ஓரளவிற்கு உண்மையோதான் என்றாலும் , என்னைப்பொறுத்தவரையில் இசையும் , ராகமுமே ரசனையின் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. அதன் பிறகு அடிக்கடி காதில் விழும் பாடலானது நம்மையறியாமல் நம் மனதில் பதிந்தது , பின்னொரு நாளில் கேட்க்கும் பொழுது , நமது காதில் விழுந்த அந்த பழைய காலம் நினைவுக்கு வந்து மனது பரவசமாகின்றது. 

 சிறுவயதில் சிவாஜி ரசிகனாக இருந்து சிவாஜிபாடல்களை மட்டும் விரும்பிகேட்டிருந்தேன், ஆனால் விதியானது வலியது. உசிலம்பட்டியில் தினமும் காலையில் இருந்து இரவு வரை 8 திசையெங்கிலும் ஒலிக்குழாய் கட்டி எம்ஜியார் காதல் மற்றும் தத்துவ பாட்டுக்கள் போட்டு போட்டு நான் விரும்பாமலே எனது காதுக்குள் பலவந்தமாக திணித்தார்கள்.. கொடுமையே என்றுதான் கடத்தினேன். ஆனாலும் என்னையறியாமல் என் மனதிற்குள்ளும் நுழைந்திருக்கின்றது போல இருக்கின்றது.

 படிப்பு முடிந்து, வேலைக்குப்போய், திருமணமாகி பிள்ளைகள் பிறந்தபின் ஜப்பான் நாட்டிற்க்கு நகர்ந்த பிறகு யோக்கோகாமா நகரில் ஓரு பூங்காவில் "பொன்னெழில் பூத்தது புது வானில் " பாடல் ஒலித்ததை கேட்டு அப்படியே திடுக்கிட்டு அத்திசைநோக்கி ஓடினேன், பாட்டு போட்டு கேட்டுக்கொண்டிருந்தவர் ஒரு தமிழர் அவரிடம் உரையாடி 3 எம்ஜியார் பாடல்களை கேட்டு ரசித்துவிட்டு வந்தேன். 

அதன் பிறகு எம்ஜியார் பாடல்கள் அனைத்தையும் சேகரித்து கேட்க்க ஆரம்பித்தேன். வார இறுதிகளில் இன்றும் எம்ஜியார் காதல் & தத்துவ பாடல்களை கேட்டு இன்புறுகையில், காலப்பயணம் செய்து , கவலைகளே இல்லாத அந்தி சிறுவயது காலத்திற்குள்ளே சென்றுவிடுகின்றேன்.

 மலைப்பாதை நடைப்பயணகளில் "The gods must be crazy" திரைப்படத்தின் பின்புல இசையை ஒலிக்க விடுவது வழாக்கம். அதில்பழக்கப்பட்டு எனது துணைவியார் தன்னியறியாமல் அடிமைப்பட்டு அந்த இசை இல்லாமல் நடைப்பயணமே கிடையாது என்கின்றார் இப்பொழுது. 

 அதுபோலவே அர்த்தமே விளங்காத இந்திப்பாடல்களும் இசை மற்றும் ஆஷா, கிஷோர் , குமார் சானு, அல்கா, கவிதா கிருஷ்ண மூர்த்தி, அனுராதா , உதித் நாராயண் இவர்களின் மந்திரக்குரல்களுக்காக , எனது மனதை கொள்ளை கொண்டுவிட்டன. 

 ஆகவே ஒரு பாடலானது பிடித்து போவதற்கு பாடலின் வரிகள் (lyrics) ஆனது அனைத்திற்க்கும் கடைசி காரணியாகும் என்பது எனது எண்ணம். பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் குறித்து பேசச்சொன்னால் பேசிக்கொண்டே இருப்பேன் அந்த அளவிற்க்கு ஆழமாக திரைப்பாடல்களை அனுபவித்து ரசிக்கின்றேன்.

 அந்த விதத்தில் இளையராஜா அவர்களை பற்றி பேசச்சொன்னால் வாழ்நாள் முழுதும் பேசிக்கொண்டே இருக்கும் அளவிற்க்கு அவரது இசையை அவதானம் செய்திருக்கின்றேன். 

 இந்நிகழ்ச்சியில் 2 விஷயங்கள் கவனித்தேன். ஒன்று ஆணாதிக்க மனப்பான்மை குறித்தது மற்றொன்று ஆச்சரியமாக குவாண்ட்டம் இயற்பியல் குறித்து. இவைகளைப்பற்றி பின்னர் பதிவிடுகின்றேன்,

No comments: